IPL 2023 பிளேஆஃப் அட்டவணை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

11 months ago
Cricket
(494 views)
aivarree.com

2023 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நுழைந்துள்ளன.

குஜராத் மற்றும் சென்னை அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துள்ள நிலையில் பிளேஆஃப்க்கான மேலும் இரு அணிகளை தேர்வு செய்வதற்கான ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை (21) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்து, தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

மும்பையின் இந்த முன்னேற்றத்துடன் நான்காம் இடத்தில் இருந்த ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஐந்தாவது இடத்திற்கு சென்றது.

இந் நிலையில் பெங்களூர் அணி, பிளேஆஃப் சுற்றுக்கு நுழைவதற்கு தனது இறுதி லீக் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி இருக்க வேண்டும்.

எனினும் குஜராத்துடன் அடைந்த தோல்வி காரணமாக தரவரிசையில் ஆறாவது இடத்தை பிடித்து வெளியேறியது.

குஜராத்தின் வெற்றிக்கு பின்னர், ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சம்பியன் 14 போட்டிகளில் 20 புள்ளிகளுடன் 2023 ஐ.பி.எல். தரவரிசையில் 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடித்தது.

அவர்களை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளிகள்) இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (17 புள்ளிகள்) மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளிகள்) நான்காவது இடத்திலும் உள்ளன.

அதேநேரம் ராஜஸ்தான் ரோயல்ஸ் (14 புள்ளிகள்), ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (14 புள்ளிகள்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (12 புள்ளிகள்), பஞ்சாப் கிங்ஸ் (12 புள்ளிகள்), டெல்லி கேபிட்டல்ஸ் (10 புள்ளிகள்), சன் ரைசர்ஸ் ஐதராபாத் (8 புள்ளிகள்) ஆகியவை தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

2023 ஐ.பி.எல். பிளேஆஃப் போட்டி தொடர்பான அட்டவணை

  • தகுதி போட்டி 1 : குஜராத் டைட்டன்ஸ் சென்னை – சூப்பர் கிங்ஸ், மே 23, செவ்வாய் – மாலை 7:30 மணிக்கு, சென்னை சிதம்பரம் மைதானம்.
  • வெளியேற்றல் போட்டி : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மே 24, புதன் – மாலை 7:30 மணிக்கு, சென்னை சிதம்பரம் மைதானம்.
  • தகுதி போட்டி 2: தகுதி போட்டி 1 இல் தோல்வியடைந்த அணி -வெளியேற்றல் சுற்றில் வெற்றி பெற்ற அணி – மே 26, வெள்ளி – இரவு 7:30 மணிக்கு, அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானம்.
இறுதிப் போட்டி

  • தகுதி போட்டி 1 வெற்றியாளர் – தகுதி போட்டி 2 வெற்றியாளர் – மே 28, ஞாயிறு – இரவு 7:30 மணிக்கு, அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானம்.