தோனி தாக்கல் செய்த வழக்கில் பொலிஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை

6 months ago
Cricket
(345 views)
aivarree.com

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில், ஓய்வு பெற்ற இந்திய பொலிஸ் அதிகாரி ஜி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவினை சென்னை மேல் நீதிமன்றம் இன்று (15) பிறப்பித்தது.

அந்த அதிகாரிக்கு தண்டனை விதித்த நீதிபதிகளான எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர், தீர்ப்பை எதிர்த்து சம்பத் குமார் மேல்முறையீடு செய்ய ஏதுவாக சிறை தண்டனையை 30 நாட்களுக்கு ஒத்தி வைத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக தோனி, தமிழக காவல் துறையின் சிஐடி பிரிவில் பணியாற்றிய சம்பத் குமார் மீது, தனக்கு எதிராக ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டினை சுமத்தியதற்காக இந்த வழக்கினை 2014 ஆம் ஆண்டு தொடர்ந்தார்.

மேலும் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் மீதும் தோனி ₹100 கோடி ரூபா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

2013 ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சம்பத்குமார் ஆரம்பக் கட்ட விசாரணையை மேற்கொண்டார்.

பின்னர் அவர் சில போட்டி நிர்ணயக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கியதாக எழுந்த முறைப்பாட்டினை அடுத்து வழக்கில் இருந்து நீக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்.