2023 ஒருநாள் உலக கிண்ணம் – தகுதிச் சுற்றுக்குள் நுழைந்த நேபாளம்

1 year ago
Cricket
(488 views)
aivarree.com

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் நேபாள அணி டக்வெர்த் லூவிஸ் முறைப்படி ஒன்பது ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நேபாளம் 2023 ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியது.

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கிறது.

இந்த தொடருக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேற உள்ள அணிகளுக்கு லீக் போட்டிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் இன்று நேபாளம் கிர்திபூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நேபாளம் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ஓட்டங்களைப் பெற்றது.

311 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய நேபாளம் 44 ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியாது என்று நடுவர்கள் முடிவு செய்தபோது, ​​நேபாளத்தின் வெற்றிக்கு 36 பந்துகளில் 42 ஓட்டம் தேவை என்ற நிலை இருந்தது.

இதன் பின்னர் டக்வெத் லூவிஸ் முறைப்படி நேபாளம் ஒன்பது ஓட்டங்களினால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் நேபாளம் சிம்பாப்வே நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை தனதாக்கியது.