டேரில் மிட்செலின் சதத்தினால் மீண்டது நியூஸிலாந்து

1 year ago
Cricket
(162 views)
aivarree.com

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 65 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.

நிஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை, தற்சமயம் 2021-2023 ஐ.சி.சி. டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த 09 ஆம் திகதி ஆரம்பமான முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, தனது முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 355 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபடியாக குசல் மெண்டீஸ் 87 ஓட்டங்களையும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தீவ்ஸ் 47 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்சய டிசில்வா 46 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டுக்களையும், மாட் ஹென்றி, 4 விக்கெட்டுகளையும் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல், ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை குவித்திருந்தது.

இந் நிலையில் இன்றைய தினம் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமானது.

நியூஸிலாந்தின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் டேரில் மிட்செல்லின் சதமானது அணியின் ஓட்ட எண்ணிக்கையை நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்தது.

அதனால் நியூஸிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 373 ஓட்டங்களை குவித்தது.

டேரில் மிட்செல் 102 ஓட்டங்களையும், மாட் ஹென்றி 72 ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் அஷித பெர்ணான்டோ 4 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், கசூன் ராஜித 2 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

18 ஓட்டங்களினால் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியானது, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களை குவித்தது.

ஓசத பெர்னாண்டோ 28 ஓட்டங்களுடனும், திமுத் கருணாரத்ன 17 ஓட்டங்களுடனும், குசல் மெண்டீஸ் 14 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்க அஞ்சலோ‍ மொத்தீவ்ஸ் 20 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜயசூரிய 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

நாளை போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.