மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம்

4 days ago
Cricket
(33 views)
aivarree.com

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நிறைவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 2021 – 2023 ஐ.சி.சி. டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நியூஸிலாந்துடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

கிறிட்சர்ச்சில் நடந்த முதல் போட்டியில் இலங்கை 2 விக்கெட்டுகளினால் தோல்வியுற்று, டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை நழுவவிட்டது.

இந்நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று வெலிங்டனில் ஆரம்பமானது.

பலத்த காற்று, மழை மற்றும் போதிய வெளிச்சம் இன்மை போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்ட 2 ஆவது போட்டியின் முதல் நாள் ஆட்டம் வெறும் 48 ஓவர்களில் மாத்திரமே நிறைவுக்கு வந்தது.

அதன்படி 48 ஓவர்களில் நியூஸிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களான டெவோன் கான்வே 78 ஓட்டங்களையும், டோம் லெதம் 21 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களுடனும், ஹென்றி நிக்கோல்ஸ் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் கசூன் ராஜித மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.