முதல் நான்கு வீரர்களும் சதம் | 704 ஓட்டங்களுடன் டிக்ளே செய்த இலங்கை

1 year ago
Cricket
(355 views)
aivarree.com

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இலங்கை அணியானது 704 ஓட்டங்களுடன் டிக்ளே செய்துள்ளது.

இலங்கை அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கடந்த திங்கட்கிழமை காலியில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 492 ஓட்டங்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நான்காம் நாளான இன்றைய தினம் மொத்தமாக 151 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 704 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் டிக்ளே செய்தது.

இதனால் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை 212 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது.

இலங்கை அணி சார்பில் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய முதல் நான்கு வீரர்களும் சதம் பெற்றமை விசேட அம்சமாகும்.

நிஷான் மதுசங்க 205 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 245 ஓட்டங்களையும் மற்றும் அஞ்சலோ மேத்யூஸ் 100 ஓட்டங்களையும் பெற்றனர்.

சர்தேச டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸில் முதல் நான்கு வீரர்கள் சதம் அடிப்பது இது மூன்றாவது முறையாகும்.

இரண்டாவது இன்னிங்ஸுக்காக தற்சமயம் அயர்லாந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.