துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் மெத்தீவ்ஸ் முன்னேற்றம்

6 months ago
Cricket
(157 views)
aivarree.com

ஐ.சி.சி. டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தீவ்ஸ் 17 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

குறித்த தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா மற்றும் நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் ஆகியோரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இவ் இரு வீரர்களும் முறையே இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான கடந்த ஆட்டங்களில் பெற்ற சிறப்பான சதங்களின் உதவியுடன் இந்த நிலையை எட்டியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்டில் கவாஜா எடுத்த 180 ஓட்டங்கள், அவரை தரவரிசையில் இரண்டு இடங்களுக்கு முன்னேற்றி 7 ஆம் இடத்திற்குக் கொண்டு சேர்த்தது.

அதே நேரத்தில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் மிட்செல் முதல் இன்னிங்ஸில் 102 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்ஸில் 81 ஓட்டங்களையும் எடுத்தார்.

இதனால் அவர் 800 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் எட்டாம் இடத்துக்கு முன்னேறினார்.

நியூஸிலாந்து அணியுடனான முதல் போட்டியில் அஞ்சலோ மெத்தீவ்ஸ் பெற்ற 47 மற்றும் 115 ஓட்டங்கள் அவரை தரவரிசையில் 19 ஆம் இடத்திலிருந்து 17 ஆம் இடத்திற்கு முன்னோக்கி நகர்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.