இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி:20 போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி முத்தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தது.
இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரினை நியூஸிலாந்து 2:0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கிலும் கைப்பற்றியிருந்தது.
பின்னர் ஒக்லேண்டில் ஆரம்பமான டி:20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
அதையடுத்து டுனெடினில் நடைபெற்ற இரண்டாவது டி:20 போட்டியில் நியூஸிலாந்து ஒன்பது விக்கெட்டுளினால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
இந் நிலையில் டி:20 தொடரின் தீர்க்கமான போட்டி இன்று குயின்ஸ்டவுனில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களை குவித்தது.
இலங்கை சார்பில் அதிகபடியாக குசல் மெண்டீஸ் 73 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களையும், பெத்தும் நிஷங்க 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
183 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, இலங்கை நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
நியூஸிலாந்து சார்பில் அதிகபடியாக டிம் சீஃபர்ட் 48 பந்துகளில் 88 ஓட்டங்களையும், அணித் தலைவர் டொம் லெதம் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மூன்று தொடர்களையும் தன்வசம் ஆக்கியது.