இங்கிலாந்து – நியூஸிலாந்துக்கு இடையேயான போட்டியுடன் ஒக்டோபரில் உலகக் கிண்ணம் ஆரம்பம்

1 year ago
Cricket
(407 views)
aivarree.com

2023 ஐசிசி ஆண்கள் உலகக் கிண்ணமானது இந்தியாவின் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகி, அங்கேயே நிறைவடையவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துடன் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணம் ஆரம்பமாகும்.

அதேநேரம் இறுதிப் போட்டியானது நவம்பர் 19 ஆம் திகதி அகமதாபாத்தில் நிறைவடையும்.

இந்த தகவலை நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தொடக்க ஆட்டம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும்.

அதேநேரம் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் மோதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) விரைவில் போட்டிகள் தொடர்பான அட்டவணையை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பிறகு, சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் முறையான ஒப்புதலைப் பெற்ற பின்னர், தொடர் நடத்துனரான பிசிசிஐ நிச்சயமாக திகதிகள் மற்றும் இடங்கள் பற்றிய இறுதி அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஐசிசி உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 10 அணிகள் 48 ஆட்டங்களில் மோதவுள்ளன.

பத்து அணிகளில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

அதேநேரம் தகுதிகான் போட்டியில் சிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஓமான், நேபாளம், இலங்கை, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும்.

இதிலிருந்து இரு அணிகள் 2023 உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும்.

தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேயில் ஆரம்பமாகவுள்ளன.