Tamil Sports News

கேள்விக் குறியாகியுள்ள ஹசரங்கவின் நிலை!

கேள்விக் குறியாகியுள்ள ஹசரங்கவின் நிலை!

File photo

இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹரசங்க எதிர்வரும் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பங்கெடுப்பாரா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

ஹசரங்க கடந்த மாதம் லங்கா பிரீமியர் லீக்கின் பிளேஆஃப் போட்டிகளின் போது தொடை காயம் காரணமாக உபாதைக்குள்ளானர்.

மேலும், 26 வயதான இலங்கை நட்சத்திரம் அண்மைய ஆசியக் கிண்ணத் தொடரிலும் இடம் பிடிக்கவில்லை.

இந்நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி டெல்லியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இலங்கையின் உலகக் கிண்ண முதல் ஆட்டத்தில் ஹசரங்க தனது உடற் தகுதியை நீரூபிக்க வேண்டிய அவகாசம் நிறைவடைந்து விட்டது.

இதனை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிந்திருந்தாலும், உலகக் கிண்ணத் தொடரில் ஹசரங்கவை களமிறக்குவதற்கான ஒவ்வொரு வழியையும் ஆராய்ந்து வருகின்றது.

” ஹசரங்கவின் நிலை குறித்து பேசியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் மருத்துவ குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா,

அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா இல்லையா என்பதை அறிய வெளிநாட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ஹசரங்கவுக்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஓய்வு அவசியம்.

இதனால், ஹசரங்க உலகக் கிண்ணத்தில் விளையாடுவது சாத்தியமில்லை” என்று தி சண்டே டைம்ஸ் செய்தித்தாளர்களிடம் கூறியுள்ளார்.

ஹசரங்க ஐசிசி ஆடவர் டி:20 உலக் கிண்ணத்தின் அண்மைய இரண்டு தொடர்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தியதில் முன்னணியில் உள்ளார்.

மேலும் சிம்பாப்வேயில் நடந்த ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியின் போதும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் ஹசரங்க 2023 உலகக் கிண்ணத்தை முழுவதுமாக தவறவிட்டால், அது இலங்கை அணிக்கு பாரிய அடியாக அமையும்.

எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தங்கள் அணியை அறிவிக்க செப்டெம்பர் 28 ஆம் திகதி வரை மாத்திரம் அவகாசம் உள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்னும் தமது அணிகளை பெயரிடவில்லை.

எனவே செப்டெம்பர் 28 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை தமது 15 வீரர்கள் கொண்ட குழுவினை ஐசிசிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version