பங்களாதேஷை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

4 months ago
Cricket
(129 views)
aivarree.com

பங்களாதேஷ் அணிக்கு எதிரான நேற்றைய உலகக் கிண்ண ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 149 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் 23 ஆவது போட்டியில் பங்களாதேஷ் – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்காவுக்கு குயின்டன் டிகொக்கின் 20 ஆவது சதம், ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடியான ஆட்டம் என்பன 300 ஓட்டங்களை கடக்க உதவின.

இதனால், தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ஓட்டங்களை குவித்தது.

டிகொக் 174 (140) ஓட்டங்களையும், கிளாசென் 90 (49) ஓட்டங்களையும், மர்க்கரம் 60 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்று ஆட்டமிழக்க, இறுதிவரை அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 15 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பின்னர் இமாலய இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 46.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பங்களாதேஷ் சார்பில் அதிகபடியாக மஹ்முதுல்லாஹ் 111 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபடியாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜோன்சன், லிசாட் வில்லியம்ஸ், ககிசோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக குயின்டன் டிகொக் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா நான்கு வெற்றிகளுடன் அட்டவணையில் இரண்டாவது இடத்துக்கு சென்றது.

அதேநேரத்தில் பங்களாதேஷ் 4 தோல்விகளுடன் இறுதி இடத்துக்கு சென்றது.