இங்கிலாந்து – நியூஸிலாந்து மோதலுடன் இன்று ஆரம்பமாகும் ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம்

5 months ago
Cricket
(139 views)
aivarree.com

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.சி.சி.யின் 13 ஆவது ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம் இன்று இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று நடைபெறும் முதல் ஆட்ட்தில் நடப்பு சம்பியனான இங்கிலாந்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இரண்டாம் இடம் பிடித்த நியூஸிலாந்து அணி மோதவுள்ளது.

இவ்விரு அணிகளும் அண்மையில் இங்கிலாந்தில் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின.

இதில் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன.

அதில் இரு அணிகளும் தலா 44 வெற்றிகளை பெற்றுள்ளது.

அதேநேரம், 3 ஆட்டங்கள் சமனிலையிலும், 4 ஆட்டங்கள் போட்டி முடிவின்றியும் கைவிடப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில் இன்று 2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டத்தில் ஒன்றுடன் ஒன்று மோதவுள்ளன.

இன்று ஆரம்பமாகும் உலகக் கிண்ண போட்டிகளானது எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் அரங்கேறும்.

இந்த உலகக் கிண்ண போட்டியில் மொத்தம் 10 அணிகள் போட்டியிடுகின்றன.

நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் லீக்கில் இருந்து போட்டியில் விளைாயட நேரடியாக தகுதி பெற்றது, அதேநேரம் இந்தியா போட்டியை நடத்துவதனால் அதற்கான தகுதியை இயல்பாக கிடைத்தது.

உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்று ஆட்டதின் மூலம் இலங்கையும், நெதர்லாந்தும் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.

2 முறை சாம்பியனான மேற்கிந்தியத்தீவுகள் முதல்முறையாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

இப்போட்டியில் மொத்தம் 45 லீக் ஆட்டங்கள், 3 நக் அவுட் என மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி நடைபெறும் அதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலேயே நவம்பர் 19 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும்.

லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

உலகக் கிண்ணத்துக்கான மொத்த பரிசுத் தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி செப்டெம்பர் 22 அறிவித்துள்ளது.

தொடரில் சம்பியன் பட்டம் வெல்பவர்கள் மொத்த பரிசுத் தொகையில் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவார்கள்.

ரன்னர்-அப்பிற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்.

2023 உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் 10 அணிகளும் முதல் சுற்றில் ரவுண்ட் ராபின் முறையில் ஏனைய அணிகளை ஒரு முறை எதிர்கொள்ளும்.

முதல் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

முதல் சுற்றில் அணிகள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 40,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்று முடிவில் நாக் அவுட்களை அடையத் தவறிய அணிகள் ஒவ்வொன்றும் தலா 100,000 அமெரிக்க டொலர்களை பெறும்.

அரையிறுதி சுற்றில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கு தலா 800,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.

கடந்த ஜூலை மாதம் தென்னாப்பரிக்காவின் டர்பினில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்திர மாநாட்டின் போது, ஆண்கள் மற்றும் மகளிர் இருவருக்கும் சமமான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்தது.

இதன் மூலம் தற்சமயம் ஒதுக்கப்பட்டுள்ள பரிசுத் தொகை 2025 இல் நடைபெறவிருக்கும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்துக்கான முன்னோடியாகவும் அமைகிறது.

உலகக் கிண்ண தொடக்க விழாவை கோலாகலமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது.

லேசா் காட்சி, பொலிவுட் நட்சத்திரங்கள் கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் தொடக்க விழா நடைபெறாது என பிசிசிஐ நேற்று அறிவித்தள்ளது.

அதற்கு பதிலாக நிறைவு விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.