முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை இலகுவாக வீழ்த்திய நியூஸிலாந்து

5 months ago
Cricket
(111 views)
aivarree.com

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சம்பியனான இங்கிலாந்தை இலகுவாக வீழ்த்தியது.

13 ஆவது ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம் நேற்று அகமதாபாத்தில் ஆரம்பமானது.

இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இங்கிலாந்துக்கு வழங்கியது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தும் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து சார்பில் அதிகபடியாக ஜோ ரூட் 77 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஜோஸ் பட்லர் 43 ஓட்டங்களையும் எடுத்தனர்.

நியூஸிலாந்து சார்பில் பந்து வீச்சில் மாட் ஹென்றி அதிகபடியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், 283 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 10 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை இழந்தது.

அதன்படி, ஆரம்ப வீரராகள களமிறங்கிய வில் யங் எந்த வித ஓட்டமின்றி தான் எதிர் கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

பின்னர், இரண்டாவது விக்கெட்டுக்காக டெவோன் கான்வே – ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஜோடி சேர்ந்தாட நியூஸிலாந்து அணி 36.2 ஓவர்களில் 283 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கினை கடந்தது.

இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்த டெவோன் கான்வே 152 (121) ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 123 (96) ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ரச்சின் ரவீந்திரா தெரிவானார்.