ஐசிசியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

8 months ago
Cricket
(154 views)
aivarree.com

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) நிர்வாகிகள் கூட்டம் நேற்று இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது பல தீர்மானங்களை ஐசிசி எடுத்தது.

குறிப்பாக அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண தொடரை நடத்தும் வாய்ப்பானது இலங்கையிடம் இருந்து பறிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டது.

இந்த தொடரில் உள்ள அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏ பிரிவில் இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து, போட்டியை நடத்தும் அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன.

பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.

சி பிரிவில் அவுஸ்திரேலியா இலங்கை, சிம்பாப்வே, நமீபியா ஆகிய அணிகள் உள்ளன.

டி பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் காணப்படும் அரசியல் தலையீடுகள் காரணமாக ஐசிசி ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை இடைநிறுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தின் போது, அந்த இடை நீக்கம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், தனது முடிவில் உறுதியாக உள்ளதாக ஐசிசி திட்டவட்டமாக அறிவித்தது.

எனினும் இலங்கை அணி போட்டிகளில் வழமையாக பங்கு கொள்ளலாம் என்று ஐசிசி தெரிவித்தது.

ஆனால் ஐசிசியின் இடைநீக்கம் அமுலுலில் உள்ளமையினால் போட்டிகளை நடத்துவதற்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியது.

மேலும் இந்த கூட்டத்தின் போது, பந்துப் பரிமாற்றத்துக்கான நேரத்தை மீறினால் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது, ஆடவர் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையில் ஸ்டாப் கடிகாரங்கள் பயன்படுத்தப்படும்.

ஸ்டொப் கடிகாரங்களின் அறிமுகம் தற்போது சோதனை அடிப்படையில் 2023 டிசம்பர் முதல் 2024 ஏப்ரல் வரை ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும்.

புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும்.

அப்படி தயாராகத பட்சத்தில், ஒரு இன்னிங்சில் இதேபோல் மூன்றாவது முறை நிகழும்போது 5 ஓட்டங்கள் பந்து வீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.

கூட்டத்தின் மற்றொரு முக்கிய முடிவாக புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்கள், சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த விதி, சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், உள்ளூர் போட்டிகளுக்கு அந்த நாடுகளின் பாலின வரையறை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் கலந்து கொண்ட முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹே இனி பெண்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்தாண்டு துவக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த டேனியல் மெக்காஹே, அவுஸ்திரேலியா நாட்டில் பிறந்தவர் ஆவார்.

கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்த அவர், கனடாவிற்காக விளையாடி வருகிறார்.

அத்துடன் இந்த கூட்டத்தில் நடுவர்களுக்கு சமஊதியம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.