இலங்கைக்கு உள்ள இறுதி வாய்ப்பு ; இன்று பங்களாதேஷுடன் மோதல்

10 months ago
Cricket
(167 views)
aivarree.com

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் 38 ஆவது போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னதாகவே அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ளன.

நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயும் அடுத்த சுற்றுக்கான பலத்த போட்டி நிலவி வருகின்றது.

இந் நிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.

பங்களாதேஷ் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளது.

எனினும் பெரும்பாலும் நாக்கவுட் வாய்ப்பினை நழுவ விட்டுள்ள இலங்கை, தனது அரையிறுதி நம்பிக்கையை உயிருடன் வைத்திருக்க இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷை தோற்கடிக்க வேண்டும்.

இது வரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை 5 இல் தோல்வியை தழுவியுள்ளது.

இரண்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

நான்கு புள்ளிகளுடன் தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை அணி அரையிறுதிக்கு தனக்கான இடத்தினை பிடிப்பதற்கு அடுத்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

அது மாத்திரமன்றி, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் எஞ்சியுள்ள அவர்களில் அனைத்து ஆட்டங்களிலும் தோற்க வேண்டும்.

இறுதியில் எட்டு புள்ளிகளுடன் லீக் போட்டிகளை முடிக்கும் பல அணிகளை விட இலங்கை அதிக நிகர ரன் விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகின்றது.

இது இவ்வாறிருக்க 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கிண்ண போட்டிக்கு நடப்பு உலகக் கிண்ண புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும்.

அந்த வகையில் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் பெறுகிறது.

இதனால் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் முயற்சிக்கும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இரு அணிகளும் இதுவரை 53 போட்டிகளிலும் மோதியுள்ளன.

அதில் இலங்கை 42 போட்டிகளிலும், பங்களாதேஷ் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இரண்டு போட்டி எதுவித முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.