சர்வதேச போட்டிகளில் மீண்டும் களமிறங்க டுபிளெசிஸ் வியூகம்

7 months ago
Cricket
(206 views)
aivarree.com

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2024 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தின் போது, சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவது குறித்து பரிசீலித்து வருவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஃபாஃப் டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாடிய பின்னர் டுபிளெசிஸ் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை.

மேலும், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் கேப்டவுனில் இங்கிலாந்துக்கு எதிரான டி:20 போட்டியே சர்வதேச அரங்கில் அவரது இறுதி வெள்ளை பந்து போட்டியாக அமைந்திருந்தது.

இந் நிலையில் 39 வயதான அவர், அண்மைக்காலமாக கடும் உடற் பயிற்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் அதிக ஓட்டங்களை எடுத்த ஷுப்மான் கில்லுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்தார்.

அவர் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 14 இன்னிங்ஸ்களில் 730 ஓட்டங்களை எடுத்தார்.

டு பிளெசிஸ் தற்போது அபுதாபியில் மற்றொரு உள்நாட்டுப் போட்டியில் பங்கேற்கிறார்.

மேலும் அவர் அடுத்தாண்டு அமெரிக்காவில் ஆரம்பமாகும் டி:20 உலகக் கிண்ண தொடருக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவத்து குறித்து கவனம் செலுத்தி வருகிறார்.

இது தொடர்பில் டு பிளெசிஸ் தென்னாப்பிரிக்க அணியின் புதிய வெள்ளை பந்து பயிற்சியாளர் ரோப் வால்டருடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டு பிளெசிஸ் 2014, 2016 ஆம் ஆண்டுகளில் இரண்டு டி:20 உலகக் கிண்ண போட்டிகளின் போது தென்னாப்பிரிக்காவிற்கு தலைவராக செயற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.