வேதனயடைந்த பாபர் அசாம் | பாகிஸ்தானின் படுதோல்விகள்

4 months ago
Cricket
(86 views)
aivarree.com

உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னர் பலமான அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான், இம்முறைத் தொடரில் தோல்விகளை சந்தித்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்திருந்தது.

திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில், முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓவர் மீதமிருக்க வெற்றியிலக்கை கடந்தது.

இதுவரையில் 8 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் முதல்முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் ஒரு அணியாக கடும் வேதனைக்கு உள்ளாகி இருப்பதாக கூறியுள்ளார்.

உலகக்கிண்ணத் தொடரில் இதுவரையில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான், இரண்டில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் கண்டுள்ளது.

இதனால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு சுருங்கியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான், சென்னையில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

‘நாங்கள் அதிருப்தியடைந்துள்ளோம், எஞ்சியுள்ள போட்டிகளிலேனும் கடந்தகால தோல்விகளை பாடமாக எடுத்துக் கொண்டு எமது அணி செயற்பட வேண்டும்’ என்று பாபர் அசாம்00000000 தெரிவித்துள்ளார்.

‘ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது நாங்கள் துடுப்பாட்டத்தில் அடைய நினைத்த இலக்கை அடைந்தோம். என்றாலும் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் நாங்கள் சிறப்பாக செயற்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனவும் அவர் கூறினார்.

திங்கள் அன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 4 சிறப்பு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி இருந்தது. இதுவே அவர்களுக்கு பலமானதாகவும் அமைந்தது.

அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் சாஹ் காயத்தின் காரணமாக இந்த தொடரில் இணைந்து கொள்ளாமையானது, பாகிஸ்தான் அணிக்கு பெரும் இழப்பாகும் என்றும் அசாம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2023 உலகக்கிண்ணத் தொடரில் இதுவரையில் நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில், இந்திய அணி ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் உள்ளது.

நியுசிலாந்து அணி 5இல் நான்கு போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ளது.

தென்னாப்பிரிக்கா 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் ஆறு புள்ளிகளுடனும், அவுஸ்திரேலியா 4 போட்டிகளில் இரண்டில் வென்று 4 புள்ளிகளுடனும் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன.

பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் 5 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும் இருக்கின்றன.

பங்களாதேஸ், நெதர்லாந்து, இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா இவ்விரண்டு புள்ளிகளுடன் இறுதி நான்கு இடங்களில் உள்ளன.