தென்னாப்பிரிக்காவின் கனவு கலைந்தது ; இறுதி போட்டியில் அவுஸ்திரேலியா

6 months ago
Cricket
(128 views)
aivarree.com

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

கொல்கத்தா, எடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமான இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபடியாக டேவிட் மில்லர் 101 ஓட்டங்களையும், கிளொசன் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் 213 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபடியாக டிராவிஸ் ஹேட் 62 ஓட்டங்களை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியான எட்டாவது வெற்றியுடன் அவுஸ்திரேலியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அஹமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.