2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்களை அனுமதிக்க ஆபிரிக்காவின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் சம்மேளனத்தின் (ANOCA) உறுப்பினர்கள் ஏகமனதாக வாக்களித்துள்ளனர்.
இந்த தகவலை ANOCA வின் செய்தி அலுவலகம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் நடுநிலைக் கொடியின் கீழ் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும் தீர்மானத்தை ANOCA ஒரு மனதாக ஆதரித்துள்ளது.
“இந்த வாரத்தில் அல்ஜியர்ஸில் நடைபெற்ற தடகள கான்டினென்டல் மன்றத்தில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க விளையாட்டு வீரர்களின் பிரதிநிதிகள், நடுநிலையாக போட்டியிடும் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு மீண்டும் வருவதை வரவேற்று, 2023 மார்ச் 3 அன்று ANOCA நிர்வாகக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு ஒருமனதாக தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ANOCA, அரசியலை விளையாட்டாக பார்க்கக்கூடாது என்று கூறியுள்ளது.
கடந்த 2022 பெப்ரவரியில் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), உக்ரைனில் ரஷ்யா தனது சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர், ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்களை சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைத் தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது.
பெரும்பாலான சர்வதேச கூட்டமைப்புகள் ஆரம்பத்தில் இந்த பரிந்துரையைப் பின்பற்றின.
ஆனால் சிலர் ரஷ்யா மற்றும் பெலாரஷ் விளையாட்டு வீரர்கள் நடுநிலைக் கொடியின் கீழ் போட்டிகளில் பங்கெடுக்க அனுமதித்தனர்.