மும்பை இந்தியன்ஸ், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எம்.சின்னசாமி மைதானத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் தனது 2023 க்கான ஐ.பி.எல். பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
ஐந்து முறை சாம்பியன் கிண்ணம் வென்ற மும்பை, கடந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தை பிடித்தது. இந் நிலையில் மீண்டும் எழும் நோக்குடன் இந்த தொடரில் களம் காணவுள்ளது.
இருந்த போதும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பைக்கு பாரிய இழப்பாக பார்க்கப்படுவது, அவர்களின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்புரித் பும்ராவின் இடைவெளி ஆகும்.
பும்ராவின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2022 செப்டெம்பர் முதல் கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார். இதனால் நடப்பு ஐ.பி.எல். மற்றும் வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியையும் அவர் தவறவிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க ஜஸ்புரித் பும்ரா மற்றும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் பிரபோர்ன் மைதானத்தில் மகளிர் பிரீமியர் லீக் (WPL) இறுதிப் போட்டியின் போது ஒரு நெகிழ்வான சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களின் சந்திப்பு குறித்து மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட தனது இன்ஸ்டாகிராம் காணொளியில், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதைக் காண முடிந்தது.
காயம் காரணமான அறுவை சிகிச்சைக்கு பின்னர் பும்ரா தனது முதல் பொதுவெளித் தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பும்ராவைப் போலவே, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆர்ச்சரும் முழங்கை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 2022 ஆகஸ்ட் முதல் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியுள்ளார்.
இந் நிலையில் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு (இந்திய ரூபா) வாங்கியுள்ளது.