டி-20 சம்பியனை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய பங்களாதேஷ்

1 year ago
Cricket
(212 views)
aivarree.com

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரினை பங்களாதேஷ் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

டாக்காவில் இன்று ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்களான லிட்டன் தாஸ் 57 பந்துகளில் 73 ஓட்டங்களையும், ரோனி தாலுக்தார் 24 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, சாண்டோ 47 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஷஹிப் அல்ஹசன் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

159 என்ற வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

இதனால் நடப்பு டி-20 உலக சாம்பியன் 16 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவினர்.

இங்கிலாந்து சார்பில் அதிகப்படியாக டேவிட் மலன் 53 ஓட்டங்களையும், பட்லர் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

முன்னதாக ஒருநாள் தொடரினை இங்கிலாந்து 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.