சுப்பர் 4 ; தனித்துவமான சாதனையை நோக்கி இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இலங்கை

6 months ago
Cricket
(170 views)
aivarree.com

ஆசியக் கிண்ணத்தில் நடப்பு சம்பியனாக மகுடம் சூடிய இலங்கை அணி, இன்று நடைபெறும் சுப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.

இதுவரை பல்லேகல மற்றும் லாகூரில் களம் கண்ட இலங்கை அணி, இன்றைய தினம் பங்களாதேஷை கொழும்பில் சந்திக்கின்றது.

அதன்படி, இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகும்.

இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் ஒரு தனித்துவமான சாதனை படைக்கப்படும்.

அந்த வகையில் இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சர்வதேச ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக அதிக முறை வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமையை இலங்கை பெறும்.

இது வரை இலங்கை தொடர்ச்சியாக 12 முறை வெற்றியை பதிவு செய்துள்ளது.

5 முறை ஒருநாள் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட அவுஸ்திரேலிய அணியானது கடந்த 2003 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வென்று, குறித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதேநேரம், 2005 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவும், 2008 ஆம் ஆண்டில் பாகிஸ்தானும் தொடர்ச்சியாக 12 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

எனவே இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் நடப்பு ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கான இலங்கையின் வாய்ப்பு பிரகாசமாகும் என்பதுடன், தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற உலகின் இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெறும்.

இரு அணிகளுக்கும் இடையிலான குழு நிலை போட்டியின் போது, இலங்கை அணியானது இலகுவாக பங்களாதேஷை வீழ்த்தியது.

எனினும் பங்களாதேஷ் அணியையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.

இலங்கை அணியின் வீரர்களைப் போலவே அனுபவம் வாய்ந்த உலகப் புகழ்பெற்ற வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் பலமும் அவர்களுக்கு உண்டு.

காலநிலையை பொறுத்தவரையில் இன்று மேல் மாகாணத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

எனினும் கொழும்பின் வானிலை இன்று காலை முதல் சீரானதாக உள்ளதையும் அவதானிக்க முடிகிறது.