உலகக் கிண்ணத்துக்கான நேரடி வாய்ப்பு கை நழுவியது

1 year ago
Cricket
(348 views)
aivarree.com

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்ட நிலையில் 2023 ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பினை இலங்கை இழந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஐ.சி.சி. உலகக் கிண்ண சூப்பர் லீக் ஒருநாள் போட்டி சீரற்ற வானிலையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்று கைவிடப்பட்டது.

இந்த முடிவானது எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான இலங்கையின் நேரடி தகுதி வாய்ப்பினை பறித்துள்ளது.

வெள்ளியன்று ஹெமில்டனில் நடைபெறும் மூன்றாவதும் இறுதியுமான ஒரு போட்டி மாத்திரமே சூப்பர் லீக்கில் இலங்கைக்கு எஞ்சியுள்ள போட்டியாகும்.

இந்த இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று மேலதிகமாக 10 சூப்பர் லீக் புள்ளிகளைப் பெற்று, பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறினாலும் நேரடி தகுதி என்பது கேள்விக் குறிதான்.

காரணம் சூப்பர் லீக் பட்டியலில் 10 ஆவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவுக்குக் கைவசம் போட்டிகள் உள்ளன. நெதர்லாந்துக்கு எதிரான ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன.

அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்கா இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை இரண்டையும் பின்னால் தள்ளி எட்டாவது இடத்திற்கு முன்னேறும்.

11 ஆவது இடத்தில் இருக்கும் அயர்லாந்துக்கு மே மாதம் பங்களாதேஷுக்கு எதிராக இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியிருப்பதால் அவர்களுக்கும் நேரடி தகுதி வாய்ப்பு கிடைக்கலாம்.

நியூசிலாந்து தற்போது சூப்பர் லீக் பட்டியலில் 165 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது மேலும் தொடரில் விளையாட இன்னும் ஒரு போட்டி உள்ளது.