இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFSL) நிர்வாக மற்றும் நிதி பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு தனது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் நாளை கையளிக்கவுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஓய்வு பெற்ற நீதியரசரான குசலா சரோஜினி தலைமையில் விசேட குழுவொன்றை அமைச்சர் நியமித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு விதிகள் திருத்தத்தில் ஏற்பட்ட தாமதம், நிதி நிர்வாகம் மற்றும் ஆட்சேர்ப்பு பணியாளர்கள் போன்றவை குறித்து குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஜனவரி 21 அன்று, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) எடுத்த முடிவின்படி, அரசியல் தலையீடு காரணமாக FFSL மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.
FFSL இதன் மூலம் FIFA சட்டங்களின் 13 ஆவது பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள அதன் அனைத்து உறுப்பினர் உரிமைகளையும் இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.