ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து யுபுன் விலகல்

7 months ago
Athletics
(159 views)
aivarree.com

இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி சீனாவில் தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மைய ஓட்ட பந்தயத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

“இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதில் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சர்வதேச அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன், ஆனால் எனது காயம் நான் எதிர்பார்த்த அளவுக்கு விரைவாக குணமடையவில்லை. நான் மீண்டு வருவதில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் வலுவாக மீண்டு வருவன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆசிய விளையாட்டு சம்மேளனம் மற்றும் ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் இணைந்து நடத்தும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசியாவின் அனைத்து நாடுகளும் பங்கேற்று விளையாடுகின்றன.