சிறிலங்கா கிரிக்கெட்டின் (SLC) புதிய யாப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட கிரிக்கெட் யாப்பு குழுவில் இருந்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஃபர்வேஸ் மஹரூப், தான் நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே விலகியுள்ளார்.
தனது கோரிக்கையை ஏற்று மேற்படி குழுவில் இருந்து தன்னை விடுவித்தமைக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு மஹரூப் டுவிட்டரில் நன்றியும் தெரிவித்துள்ளார்.
“எனது நிபுணத்துவம் முக்கியமாக விளையாட்டின் தொழில்நுட்ப விஷயங்களில் இருப்பதாக உணர்கிறேன், அரசியலமைப்பு விஷயங்களில் அல்ல. எனவே, கொள்கை மற்றும் சட்டத்தில் அல்லாமல், தொழில்நுட்ப விஷயங்களில் சிறந்த பங்களிப்பை என்னால் வழங்க முடியும் என்று நான் உணர்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த வாரம் (23) விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் (SLC)க்கான உத்தேச புதிய யாப்பு வரைவை சமர்பிப்பதற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தார்.
இந்த குழுவில் கலாநிதி துமிந்த ஹுலங்கமுவ, கலாநிதி அரித்த விக்கிரமநாயக்க, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரேணுகா ரோவல், தீப்திகா குலசேன, கயல் கலடுவாவ, ஹரிகுப்த ரோஹணதீர மற்றும் முன்னாள் கிரிக்கட் வீரர்களான சரித் சேனாநாயக்க மற்றும் ஃபர்வேஸ் மஹ்ரூஃப் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டனர்.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் தொழில்நுட்பக் குழுவின் (ICC) உதவி, வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன், சுயாதீன ஆளுகை நிபுணர்கள் குழுவானது, பாரபட்சமின்றி, புறநிலையாக, தேவையான பங்குதாரர்களின் விசாரணைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தும் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஊடக அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் கூற்றுப்படி, இந்த குழு இரண்டு மாதங்களுக்குள் உத்தேச புதிய யாப்பு வரைவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.