BCCI, ICCயில் மேன்முறையீடு

1 year ago
Cricket
(221 views)
aivarree.com

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) இந்தூர் டெஸ்டின் ஆடுகளத்திற்கு போட்டி மத்தியஸ்த்தர் கிறிஸ் பிராட் வழங்கிய குறை மதிப்பீடு குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் (ஐசிசி) மேன் முறையீடு செய்துள்ளது.

க்ரிக் இன்ஃபோவின் செய்தியின் படி, இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச கிரிக்கட் பேரவையின் குழு 14 நாட்களுக்குள் தங்கள் தீர்ப்பை அறிவிப்பதற்கு முன் இந்த முறைப்பாடு குறித்து மறுபரிசீலனை செய்யும்.

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போர்டர்-கவாஸ்கர் கிண்ணத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின் முதல் இரண்டு நாட்களில் 30 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இந்த டெஸ்டில் வீழ்த்தப்பட்ட 31 விக்கெட்டுகளில் இருபத்தி ஆறு விக்கட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களால் வீழ்த்தப்பட்டவை.

அவுஸ்திரேலியா முதல் இரண்டு டெஸ்டில் தோல்வியடைந்த பின்னர் இந்த போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் முடிவில், போட்டி நடுவர் பிராட் தனது அறிக்கையில், ‘ஆடுகளம் மிகவும் வறண்டதாகவும், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் சமநிலையை இருக்கவில்லை என்றும், தொடக்கத்தில் இருந்தே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்றும் கூறியிருந்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘போட்டி முழுவதும் அதிகப்படியான மற்றும் சீரற்ற பவுன்ஸ் இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிராட்டின் மதிப்பீட்டின்படி, இந்த மைதானம் இப்போது மூன்று குறைபாடு புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்த குறைமதிப்பீடானது ஐந்தாண்டு காலத்திற்கு செயலில் இருக்கும்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்திருக்கிறது.