2021-23 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி முதல் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் 2021-23 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பரிசுத் தொகையினை ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி, ஒன்பது அணிகளுக்கு இடையில் பரிசுத் தொகையினை பகிர்ந்து கொள்வதற்காக மொத்தம் 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் 1.6 மில்லியன் அமெரிக்க டொலரினை பரிசுத் தொகையாக பெறுவார்கள்.
இரண்டாம் இடம் பிடித்தவர்கள் 800,000 அமெரிக்க டொலரை பரிசுத் தொகையாக பெறுவோர்கள்.
2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததற்காக தென்னாப்பிரிக்காவுக்கு 450,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டவுள்ளன.
தாமதமாக முன்னேறி நான்காவது இடத்தை பிடித்த இங்கிலாந்துக்கு 350,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
ஐந்தாவது இடத்தை பிடித்த இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
மீதமுள்ள நியூசிலாந்து (6), பாகிஸ்தான் (7), மேற்கிந்திய தீவுகள் (8), மற்றும் பங்களாதேஷ் (9) ஆகிய அணிகளுக்கு தலா 100,000 அமெரிக்க டொலர் வெகுமதியாக வழங்கப்படும்.
2019-21 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் ஒப்பிடும்போதும் பரிசுத் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதன்போதும் மொத்தம் 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக ஒதுக்கப்பட்டிருந்தது.
அப்போது சாம்பியனான கேன் வில்லியம்சனின் நியூசிலாந்துக்கு 2021 இல் சவுத்தாம்ப்டனில் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட ஆறு நாள் WTC இறுதிப் போட்டியில் அவர்கள் இந்தியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.