ஃபிஃபா உலகக் கோப்பை 2022இல், சனிக்கிழமை டென்மார்க்கை வென்ற ஃப்ரான்ஸ், 16 அணிகளின் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் முதலாவது அணி ஃப்ரான்ஸாகும்.
அதேநேரம் 2006 இல் பிரேசிலுக்குப் பிறகு 16 அணிகளின் சுற்றுக்கு தகுதி பெற்ற முதலாவது நடப்பு சாம்பியனாகவும் பிரான்ஸ் ஆனது.
டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சன் ஒரு கோல் அடித்த போதிலும், ஃப்ரான்ஸின் கைலியன் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்தார்.

இதன்மூலம் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கழகத்தின் ஸ்ட்ரைக்கர் 2022 FIFA உலகக் கோப்பை தொடரில் 3 கோல்களை மொத்தமாக பெற்று, ஈக்வடோரின் என்னெர் வெலன்சியாவுடன் சமநிலையில் உள்ளார்.
அத்துடன் ஃப்ரான்ஸ் சார்பாக உலகக்கிண்ணத் தொடர்களில் அதிக கோல் அடித்த இரண்டாவது வீரராகவும் உள்ளார்.
அவரும் முன்னாள் ஃப்ரான்ஸ் வீரர் சினெடென் சிடேனும் தலா 7 கோல்களை போட்டுள்ளனர்.
இதேவேளை நடப்பு சாம்பியனாக இருக்கும் அணியொன்று, உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறிச் செல்லும் “சாம்பியன்களின் சாபம்” (Champion’s curse) கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வந்தது.

1998இல் ஃப்ரான்ஸால் ஆரம்பமான இந்த சாபம் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
FIFA உலகக் கோப்பை 2006இன் வெற்றியாளரான இத்தாலி, 2010 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் நொக் அவுட் ஆனது.
2010 இல் தனது முதல் உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தொடரில் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது.
2014இன் சாம்பியனான ஜெர்மனி, 2018இல் முதல் சுற்றுடன் வெளியேறியது.
1998இல் ஃப்ரான்ஸ் அணியாலேயே இந்த நிலைமை ஆரம்பமானதால், இதற்கு ஃப்ரான்ஸின் சாம்பியன்களின் சாபம் என காற்பந்தாட்ட உலகில் பெயர்சொல்லப்படுகிறது.