104 போட்டிகளுடன் FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர்

1 year ago
Football
(487 views)
aivarree.com

2026இல் நடைபெறவுள்ள ஆண்களுக்கான FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் 48 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

இந்த விரிவாக்கப்பட்ட வடிவத்தின் காரணமாக பாரம்பரியமாக இடம்பெறும் 64 போட்டிகளுக்கு பதிலாக அடுத்தமுறை 104 போட்டிகள் நடைபெறும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் 2026 உலகக்கிண்ணத் தொடரில், 48 அணிகள் பங்கேற்கும் முதல் தொடராகும்.

 “FIFA பேரவை, FIFA உலகக் கோப்பை 2026 போட்டி வடிவத்திற்கான முன்மொழியப்பட்ட திருத்தத்தை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

3 அணிகள் அடங்கிய 16 குழுக்கள் முறையில் இருந்து, 4 அணிகள் அடங்கிய 12 குழுக்கள் முறைமைக்கு மாறியுள்ள புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு குழு நிலை போட்டிகளிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகளும், எட்டு சிறந்த மூன்றாம் இடம் பெறும் அணிகளுமாக 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்,” என்று FIFA தெரிவித்துள்ளது.

இதன்படி முதல் சுற்றில் அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளை விளையாடுவதை உறுதி செய்கிறது.

அதே நேரத்தில் போட்டியிடும் அணிகளுக்கு இடையில் சமநிலையான ஓய்வு நேரமும் வழங்கப்படுகிறது. 

கட்டாரில் 32 அணிகள் பங்கேற்ற 2022 உலகக் கோப்பை 29 நாட்களில் மொத்தம் 64 போட்டிகள் நிறைவடைந்தன.  

கடந்த முறை மெக்சிகோவும் (1986), அமெரிக்காவும் (1994) உலகக் கோப்பையை நடத்தியது 24 அணிகள் மட்டுமே.

1998இல் இருந்து உலகக்கிண்ண போட்டித் தொடரில் 32 அணிகள் உள்ளன.

அப்போது நான்கு அணிகள் கொண்ட எட்டு குழுக்கள் இருந்ததால், இறுதிப் போட்டி வரை செல்கின்ற அணிகள் தலா ஏழு ஆட்டங்களை விளையாடுகின்றன. 

ஆனால் 2026 இல் இறுதிபோட்டியை அடையும் அணிகள் மொத்தம் எட்டு போட்டிகளில் விளையாடும்.

FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்ட 2026 பதிப்பிற்கான அசல் திட்டத்தில் மொத்தம் 80 போட்டிகள் இருந்தன.

ஆனால் போட்டிகளின் எண்ணிக்கையை 104 ஆக அதிகரிப்பதற்கான முடிவு செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் FIFA பேரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

பாரம்பரியமாக ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் கடைசி 16க்கு முன்னேறும்.

ஆனால் 2026 பதிப்பில் எட்டு சிறந்த மூன்றாவது இடங்களைப் பெறும் அணிகளும் 32 அணிகளின் சுற்று என்ற நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.