அயர்லாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் புதிய வீரர்

1 year ago
Cricket
(459 views)
aivarree.com

28 வயதான துஷான் ஹேமந்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் அயர்லாந்துடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் அணிக்கு முதல் அழைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக முதல் முறையாக இலங்கைக்கு பயணம் செய்யும் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ள 15 பேர் கொண்ட அணி குறித்த விபரங்கள் கசிந்துள்ளன.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தொடர்ந்து அணியை வழிநடத்துவார்.

ஆனால் இந்தத் தொடருக்குப் பின்னர் அவர் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவார்.

இருப்பினும், அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிரோஷன் டிக்வெல்லவை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பத்தும் நிஸ்ஸங்க மற்றும் ஓஷத பெர்னாண்டோ இருவரும் நீக்கப்பட்டதால் இலங்கையும் ஒரு புத்தம் புதிய டொப்-ஆர்டரைப் பெறும்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நிஷான் மதுஷ்கா தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

அதே நரத்தில் விக்கெட் காப்பாளர், துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம அணியில் இடம் பிடித்துள்ளார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்தெனியவும் சமீபத்தில் முடிவடைந்த என்எஸ்எல் போட்டியில் ஓரளவு சிறப்பாக விளையாடிய நிலையில் அணியில் இடம்கிடைத்துள்ளது.

இருப்பினும், 28 வயதான சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் துஷான் ஹேமந்தவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து லயன்ஸ் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தால் தேர்வாளர்களின் கவனத்தை அவர் ஈர்த்தார்.

அவர் 2012ஃ13 இல் செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியின் தலைவராக தனது பாடசாலை கிரிக்கெட் வாழ்க்கையை முடித்த பின்னர் கிளப் அணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ஹேமந்த 44 முதல்தர போட்டிகளில் விளையாடி 1993 ஓட்டங்களை 31.63 சராசரியில் குவித்துள்ளார்.

அதே நேரத்தில் 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் அணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

இலங்கை டெஸ்ட் அணி (அதிகாரப்பூர்வமில்லை)

திமுத் கருணாரத்ன (தலைவர்), தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், நிஷான் மதுஷ்க (வி.கா), சதீர சமரவிக்ரம (வி.கா.), அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க, ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, லசித் எம்புல்தெனிய, துஷான் ஹேமந்த