வெற்றியில் திருப்தியில்லை – ரோஹித் சர்மா

2 weeks ago
Cricket
(31 views)
aivarree.com

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால் இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா தனது அணி பந்துவீச்சில் பலவீனமாக செயற்பட்டது என்று ஒப்புகொண்டார்.

மொஹமட் சிராஜ் சிறப்பாக பந்துவீசி இருந்தார்.

நியுசிலாந்தின் மைக்கல் பிரேஸ்வெல்லின் வேகமான சதம் மற்றும் மிட்செல் சான்ட்னருடன் கூட்டு ஆடிய இணைப்பாட்டம் என்பன இந்தியாவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தன.

எனினும் இந்த இரண்டு சகலதுறை வீரர்களின் தாக்குதலை இந்தியா முறியடித்து மூன்று போட்டிகளின் முதல் போட்டியில் நியூசிலாந்தை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

எவ்வாறாயினும் இதுகுறித்து இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

‘உண்மையைச் சொல்வதாக இருந்தால், மைக்கல் ப்ரேஸ்வெல்லின் துடுப்பாட்டம் மிக வேகமாக இருந்தது. எமது பந்துவீச்சாளர்களால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. நாணய சுழற்சி நேரத்தில் நான் எதிர்பார்த்ததைப் போல ஆடுகளம் இருக்கவில்லை. பந்துகள் லாவகமாக துடுப்புக்கே வந்தன. ஆனால் இறுதி நேரத்தில் நாங்கள் போராடி வெல்ல வேண்டிதாக இருந்தது’ என்று சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் ஆகியோரையும் சர்மா பாராட்டினார். ‘கில் மிகவும் நன்றாகப் விளையாடுகிறார். அவர் இருந்த ஃபார்மை அணிக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்பினோம். சிராஜ் புத்திசாலித்தனமாக பந்துவீசினார்’ என்று ரோஹித் சர்மா கூறினார்.

ஹைதாராபத்தில் நியுசிலாந்துக்கு எதிராக நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 349 ஓட்டங்களைக் குவித்தது.

கில் அதிகபட்சமாக 208 ஓட்டங்களை எடுத்தார். அணித்தலைவர் ரோகித் சர்மா (34), சூர்யகுமார் யாதவ் (31), ஹர்டிக் பாண்டியா (28) என்ற ரீதியில் ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

350 ஓட்;ட இலக்கை துரத்திய நியுசிலாந்தின் மீது இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.

ஒரு கட்டத்தில் நியுசிலாந்து 131க்கு 6 என்ற நிலையில் இருந்தது.

ஆனால் மைக்கல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சான்ட்னர் இடையேயான ஏழாவது விக்கெட் இணைப்பாட்டம் எல்லாவற்றையும் மாற்றியது.

மைதானம் முழுவதும் இந்திய பந்துவீச்சாளர்களை துடுப்பாட்ட வீரர்கள் ஓடச் செய்தனர்.

பிரேஸ்வெல் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை அடித்தார், அதே நேரத்தில் சான்ட்னரும் அரை சதம் அடித்தார்.

சான்ட்னரை 57 ஓட்ங்களுடன் மொஹமட் சிராஜட் ஆட்டமிழக்கச் செய்தார்.

இறுதி ஓவரில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஷர்துல் தாக்கூர் பிரேஸ்வெல்லை 78 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 140 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இரட்டை சதத்திற்காக சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.