Tamil Sports News

விளையாட்டுத்துறை அமைச்சரின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை திகதி அறிவிப்பு

விளையாட்டுத்துறை அமைச்சரின் மேன் முறையீட்டு மனு மீதான பரிசீலனை திகதி அறிவிப்பு

file photo

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தாக்கல் செய்த மூன்று மேன்முறையீட்டு மனுக்களை எதிர்வரும் 15 ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டுத்துறைக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவர் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பான மனுக்கள் முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சம்பந்தப்பட்ட மனுக்களை எதிர்வரும் 15 மற்றும் 18 ஆம் திகதிகளில் பரிசீலிக்க நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.

விளையாட்டுத்துறை அமைச்சர் 2022 டிசம்பர் 14, அன்று விளையாட்டுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.

விளையாட்டு விதிமுறைகளால் தமக்குக் கடுமையான அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து பல விளையாட்டு சங்கங்கள் தாக்கல் செய்த ரிட் மனுக்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை உரிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ள விதம் சட்டத்திற்கு முரணானது எனவும், எனவே அவற்றைச் செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த மேன்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

Exit mobile version