போட்டிகளின் முழு பார்வை

1 year ago
Cricket
(507 views)
aivarree.com


தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் நேற்று ராஜஸ்தான் ரோயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஆகியவை டெல்லி கேபிடல்ஸ் (டிசி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (டிசி) அணிகளை வென்று புள்ளிகள் பட்டியலில் மேல்நோக்கி நகர்ந்தன.


குவாஹாட்டியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ், 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது.


தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இடையேயான 98 ஓட்டங்கள்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டன.


யஷஸ்வி 31 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 60 ஓட்டங்களை எடுத்தார்.


பட்லர் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 79 ஓட்டங்களை எடுத்தார்.

இறுதியில் ஷிம்ரோன் ஹெட்மியர் (21 பந்துகளில் 39 ஓட்டங்கள்) வேகமாக விளையாடி ஆட்டமிழக்காதிருந்தார்.

டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகுளையும், குல்தீப் யாதவ் மற்றும் ரோவ்மேன் பவல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

200 என்ற ஓட்ட இலக்கை துரத்திய டெல்லி, பவர்பிளேயின் முடிவில் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்தது.


லலித் யாதவ் (24 பந்துகளில் 38) மற்றும் டேவிட் வோர்னர் இடையேயான 64 ஓட்ட இணைப்பாட்டம் ஓரளவு நம்பிக்கை அளித்தது.


ஆனால் யுஸ்வேந்திர சாஹல் (3|27) மற்றும் ட்ரென்ட் போல்ட் (3|29) டெல்லியால் கையாள முடியாத அளவுக்கு சிறப்பாக பந்துவீசினர்.
இதன்படி டெல்லி 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 142 ரன்களை ஓட்டங்களை எடுத்து தோல்வியடைந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

யஷஸ்வியின் ஆட்டம் அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது.

‘ஐ.பி.எல் எல் க்ளாஸிகோ’ போட்டியாக பார்க்கப்பட்ட அடுத்த ஆட்டத்தில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது.

மும்பை ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி 6 ஓவர்களில் 61 ஓட்டங்களைப் பெற்று 1 விக்கட்டை இழந்திருந்தது.


ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா (3|20), மிட்செல் சான்ட்னர் (2|28) மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே (2|31) ஆகியோர் மும்பையின் துடுப்பாட்ட வரிசையை சேதப்படுத்தினர்.


இஷான் கிஷான் (32) மற்றும் டிம் டேவிட் (31) தவிர, ஏனையோர் சிறப்பாக செயற்படவில்லை.


ரோஹித் (21), கேமரூன் கிரீன் (12), சூர்யகுமார் யாதவ் (1) ஆகியோர் வேகமாக ஆட்டமிழந்தனர்.


எனவே, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 157 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

சென்னை 158 ஓட்டங்களை துரத்துகையில், டெவோன் கொன்வே ஒரு டக் அவுட்டானார்.


ஆனால் அஜிங்க்யா ரஹானே 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 61 ஓட்டங்களை எடுத்து வான்கடே ஸ்டேடியத்தை ஒளிரச் செய்தார்.


ருதுராஜ் கெய்க்வாட் (40), ஷிவம் துபே (28) மற்றும் அம்பதி ராய்டு ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை 18.1 ஓவரில் இலக்கை எட்டியது.


புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள், ஒரு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.


டெல்லி கெப்பிட்டல்ஸ் தனது மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது.


சிஎஸ்கே இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் நான்கு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் இதுவரை இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.