இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

2 years ago
Cricket
(537 views)
aivarree.com

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது.

தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஹாமில்டனில் இன்று ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நியூஸிலாந்தின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் திண்டாடியது.

இறுதியாக 41.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஆரம்ப வீரரான பெதும் நிஷங்க 57 ஓட்டங்களை பெற்றார். அதற்கு அடுத்தபடியாக அணித் தலைவர் தசூன் சானக்க 31 ஓட்டங்களையும், சமிக்க கருணாரத்ன 24 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

நியூஸிலாந்து சார்பில் பந்து வீச்சில் மாட் ஹென்றி, ஹென்றி ஷிப்லி மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 158 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி நியூஸிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

அணியின் முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்து வெளியேற வில் யோங் மாத்திரம் தாக்குப் பிடித்தாடினார்.

அதனால் நியூஸிலாந்து 32.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட வில் யோங் மொத்தமாக 113 பந்துகளில் 86 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

அவருக்கு உறுதுணையாக நின்றாடிய ஹென்றி நிக்கோல்ஸ் 52 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், தசூன் சானக்க, கசூன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரு அணிகளுக்குமான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடர் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி ஒக்லேண்டில் ஆரம்பமாகிறது.