ஆகாஷ் மத்வாலின் சிறப்பான பந்து வீச்சுடன் லக்னோவை வெளியேற்றியது மும்பை

1 year ago
Cricket
(345 views)
aivarree.com

2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் புதன்கிழமை (24) நடைபெற்ற வெளியேற்றல் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை வீழ்த்தியது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மா‍லை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களை குவித்தது.

கேமரூன் கிரீன் 41 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகபட்சமாக எடுத்தனர்.

லக்னோ அணி சார்பில் நவீன்-உல் ஹக் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

எனினும் மும்பை அணி வீரர் நேஹால் வதேரா 12 பந்துகளில் 23 ஓட்டங்களை எடுத்து அதிரடி காட்டியமையும் மும்பையின் வெற்றிக்கு கை கொடுத்தது.

பின்னர் 183 என்ற வெற்றியிலக்கனை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ அணியால் 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

லக்னோ சார்பில் அதிபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் மாத்திரம் 27 பந்துகளில் 40 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சில் மும்பை சார்பில் ஒரு பரபரப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் மத்வால் 3.3 ஓவரில் 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இந்த தோல்வியின் மூலம் 2023 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் வெளியேறிய நிலையில் மும்பை 2 ஆவது தகுதிச் சுற்றுக்கு நுழைந்தது.

2 ஆவது தகுதிச் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மும்பை அணி தனது சொந்த மைதானத்தில் வெள்ளிக்கிழமை (26) மோதுகிறது.